கோவையில் இருந்து மஞ்சூருக்கு 40 பயணிகளுடன் சென்ற பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்

மஞ்சூர்: மஞ்சூர் அருகே அரசு பஸ்சை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இந்த பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் ேராடுகளில் நின்று வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.

கோவையில் இருந்து 40 பயணிகளுடன் அரசு பஸ் மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கெத்தை அருகே 18 கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது எதிரே 6 காட்டு யானைகள் நடுரோட்டில் சாலையை மறித்தபடி நின்று கொண்டிருந்தன. இதை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார். இதேபோல் மஞ்சூரில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளின் வழி மறிப்பில் சிக்கி சாலையோரமாக நிறுத்தப்பட்டன.

சுமார் முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் பின்னர் வனத்துக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து அரசு பஸ் மற்றும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. கடந்த இரு தினங்களுக்கு முன் பென்ஸ்டாக் பகுதியில் உலா வந்த காட்டு யானைகள் அங்குள்ள வனத்துறை ஓய்வு விடுதியின் வாயிற்கேட்டை உடைத்து உள்ளே சென்றதுடன் ஓய்வு விடுதி ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: