நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் கிறிஸ்டோபர் என்பவர் பையர் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வள்ளியூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு ஒன்று பதிவானது. இதனிடையே தலைமறைவாகி விட்டார்.

இதனை தொடர்ந்து, அவரை தேடும் பணியில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா பல இடங்களில் தேடி வந்த நிலையில் இவர் கப்பிக்காடு என்ற இடத்தை சார்ந்த ஒரு பொண்ணுடன் அடிக்கடி தொலைபேசியிலும் பேசி வருவது தெரியவந்தது. இதனையடுத்து லீலாபாய் என்ற பெண்ணை நேற்று விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் உடல்நிலை சேரியில்லாத காரணத்தினால் அவர் வாந்தி எடுத்துள்ளார்.

அதன் பிறகு அவர் வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர் நிலை மோசமானதால் நாகர்கோயிலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது  வழியிலேயே லீலாபாய் உயிரிழந்தார் என காவல்த்துறை தெரிவித்துள்ளனர். மேலும் லீலாபாயின் மகன் திலீப்குமார் உடன் இருந்தார் எனவும் இற்றதுபற்றி அவருக்கு முழுவிவரமும் தெரியும் என காவல்த்துறை தரப்பில் கூறுகின்றனர்.

மேலும் லீலாபாய் தனி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இறந்த லீலாபாயின் உடல் நாகர்கோயிலில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல்கூர் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவருடைய உறவினர்களும் அவருடைய சமூகத்தை சார்ந்தவர்களும் இது பற்றி முழுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இறந்த லீலாபாய்(55) இவருக்கு 2 மகன்களாக திலீப்குமார் மற்றும் பிரேம்  ஆகியோர் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டோபர் என்பவருக்கும் லீலாபாய்க்கும் ஏதோ ஒரு வகையில் உறவு உள்ளது என காவல்த்துறை சந்தேகித்து, அதைத்தொடர்ந்து கிறிஸ்டோபர் அடிக்கடி லீலாபாயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் காவல்த்துறை கட்டுக்கதை கட்டி வருகிறார்கள்.

ஆனால் இறந்த லீலாபாய் மீது இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில் தலைமறைவான கிறிஸ்டோபரை பிடித்து விசாரணை நடத்த முடியாமல் லீலாபாயை பிடித்து விசாரணை நடத்தியதால் தான் இந்த மர்ம மரணம் ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: