குடிமராமத்து என்ற பெயரில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

*ஆண்டிபட்டி அருகே பரபரப்பு புகார்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள கண்மாயில் குடிமராமத்து  என்ற போர்வையில் மரங்களை வெட்டி கடத்துவதாக வட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் கிராமத்திற்கு தெற்கே பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான உப்பு ஓடை கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை தூர் வாரக்கோரி இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு மனுக்களை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு கண்மாய்களை தூர் வார உத்தரவிட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக தேனி மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 30 கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் ஆண்டிபட்டி அருகே ஏத்தகோயில் கிராமத்திற்கு தெற்கே உள்ள உப்பு ஓடை கண்மாயிலும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், குடிமராமத்து பணி என்ற பெயரில் சிலர் மரங்களை வெட்டி கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து குடிமராமத்து வேலையை பொதுப்பணித்துறையினர் தற்போது நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து சித்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்  கூறுகையில், `` குடிமராமத்து என்ற பெயரில் கண்மாயில் உள்ள வேம்பு புங்கை வாகை போன்ற  மரங்களை வெட்டயும், ஜேசிபியை வைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்களை  கடத்துகின்றனர் என்று ஏத்தக்கோயில் காவல்நிலையத்திலும், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளேன். அதில். உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்’’ என்று  கூறினார்.

இதுகுறித்து வட்டாட்சியர் கூறுகையில், உப்பு ஓடை கண்மாயில் குடிமராமத்து என்ற பெயரில் மரங்களை வெட்டுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து. கண்மாயை ஆய்வு செய்தோம். பட்டா நிலத்திலும், கண்மாயில்  இருந்த மரங்களை வெட்டியது தெரிய வந்தது. வெட்டிய மரங்களை  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது சம்பந்தமாக விசாரணை  நடைபெற்று வருகிறது என்று  கூறினார். இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறுகையில், உப்பு ஓடையில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள், ஆயக்கட்டு விவசாயிகளின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அவர்கள், தூர்வாரும் நோக்கில் சில மரங்களை அகற்றியுள்ளனர். இது சம்பந்தமாக விவசாய சங்கத்தினரிடம் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் இனி வரும் காலங்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தூர் வார வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Related Stories: