நெல்லையில் சூறைக்காற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து வாகனங்கள் சேதம்

நெல்லை: நெல்லையில் தொடர் சூறைக்காற்று வீசியதால் கலெக்டர் அலுவலகத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதில் பைக்குகள் சேதமடைந்தன. நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்கிறது. இதனால் மற்ற பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று பலமாக வீசிவருகிறது. ஆடி மாதம் தொடங்கிய பின்னர் புழுதியை பரப்பும் காற்று வீசுகிறது. நேற்று பகலில் தொடங்கி நாள் முழுவதும் சூறைக்காற்று போல் காற்றின் வேகம் இருந்தது. இதனால் வாகனஓட்டிகள் மற்றும் சாலைகளில் நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டனர். நேற்று மாலை வீசிய பலத்த காற்றின் போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம் முன் இருந்த வேப்பமரம் ஒன்றின் பெரிய கிளை ஒடிந்து விழுந்தது.

அந்த கிளை அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது விழுந்ததால் அவை சரிந்து விழுந்து சேதமடைந்தன. மரக்கிளை விழுந்த போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்து தப்பினர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மரக்கிளைகளை அகற்றி வாகனங்களை மீட்டனர். மேலும் பல மரங்களின் ஏராளமான சிறிய கிளைகளும் இலைகளும் உதிர்ந்து விழுந்தன. பனை விழுந்து ஐடிஐ சுவர் சேதம்: பேட்டை பகுதியில் நேற்று மதியம் வீசிய சூறைக்காற்றில் அங்குள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் இருந்த பனை மரம் மூட்டோடு சரிந்து விழுந்தது. இதில் ஐடிஐ காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் அந்த பகுதியில் இல்லாததால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.

Related Stories: