வீடு, வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு திட்ட கட்டமைப்புகள் உள்ளதா?

திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்ட கட்டமைப்புகள் உள்ளதா என கணக்கெடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். பருவமழை தொடங்கும் முன் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யவும், மழைநீர் சேகரிப்பு இல்லாத கட்டிடங்களில் உடனடியாக அவற்றை அமைக்கவும், திருச்சி மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக மீண்டும் செயல்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், மாநகர் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், பருவமழையால் கிடைக்கும் நீரைச் சேமிக்கவும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, மாநகர் முழுவதுமுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்ட கட்டமைப்புகள் உள்ளதா? இல்லையா என்பது குறித்து மாநகராட்சி அலுவலக வருவாய் உதவியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட கள அலுவலர்கள் வாயிலாகக் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையிலும், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் மாநகராட்சிக்கு சொந்தமான குளங்களைத் தூர்வாரி பராமரிக்க உத்தரவிட்டனர். முன்னதாக ஆணையர் ரவிச்சந்திரன், நகரப் பொறியாளர் அமுதவல்லி ஆகியோர் நேற்று மஞ்சத்திடல் குளம் மற்றும் ஆலத்தூர் குளங்களைப் பார்வையிட்டனர்.

Related Stories: