மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 200 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு மட்டும் 200க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் சார்பில், தர்மபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 18வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மலர்விழி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது, தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33,788 மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெரியவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குள் குழந்தை திருமணம் செய்வதால், மாற்றுத்திறனுடன் குழந்தைகள் பிறக்க ஒரு காரணமாக உள்ளது.

பெண்களுக்கு 18 வயதுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டும். 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்தால், அது குழந்தைத் திருமணம். குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தைத்திருமணத்தை தடுக்கும் வகையில், தமிழக அரசு 18 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்களுக்கு, அவர்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் திருமண நிதி உதவித்திட்டங்களை வழங்கிவருகிறது. பட்டதாரி பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 50 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பெண்குழந்தைகளை பாதுகாக்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும் தர்மபுரி மாவட்டத்தில் சென்ற ஆண்டு மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. உரிய வயது அடையாமல் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்கிற போது உடல் ரீதியாவும், மன ரீதியாகவும் ஒரு குழந்தையை பெற்று வளர்க்கக்கூடிய மன நிலையில் அந்த பெண்பிள்ளைகளுக்கு இருக்காது. இரும்பு சத்து குறைபாடு காரணமாக, பிரசவ காலங்களில் அதிக தாய்மார்கள் உயிரிழக்கின்றனர்.

இதை தடுப்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கருவுற்ற உடனே பதிவு செய்தால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூ.18ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியை பயன்படுத்தி, கருவுற்ற தாய்மார்கள் இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாகவும், பிரசவ காலத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வலிமை உருவாகும். தர்மபுரி மாவட்டத்தில் தாய்மார்களுக்கு ரத்தத்தில் இரும்பு சத்தின் அளவு 7 கிராம் முதல் 8 கிராம் வரை உள்ளது. இந்த அளவே பெரிதாக கருதுகிறோம். ஆனால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ரத்தத்தில் இரும்பு சத்தின் அளவு சாதாரணமாக, 8 கிராமிற்கு மேல் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் சரியான அளவு ஊட்டசத்து உணவுகளையும், இரும்பு சத்து உள்ள உணவுகளையும் சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு மாற்றுத்திறன் குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோர்களால் தான் மாற்றுத்திறன் குழந்தைகள் பிறக்கின்றன.

கர்ப்ப காலத்தில் தேவையான பழங்கள், காய்கறிகள் உட்கொள்ள வேண்டும். கழி, கூழ் சாப்பட்டிக்கொண்டு சத்தாணவு உணவு சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அங்கன்வாடி மையங்களில் கருவுற்ற தாய்மார்களுக்கு இணை உணவு மற்றும் சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்துக்கொள்வதும், மாற்றுத்திறன் குழந்தைகள் பிறப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. குழந்தைகள் பிறந்த பிறகு உரிய காலத்தில் மாற்றுத்திறன் உள்ளதை கண்டறிய வேண்டும். காது கேட்காத குழந்தையாக இருந்தால், 3 வயதுக்குள் அந்த குறைபாட்டை கண்டறிந்தால் அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம், இலவசமாக காக்லார் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

தனியார் மருத்துவ மனைகளிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ₹5லட்சம் இருந்து ₹8 லட்சம் வரை செலவு செய்து, இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்குபின் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் அதிகரிக்கும். உரிய வயதில் குழந்தைகளுக்கு உள்ள குறைபாடுகளை கண்டறிந்தால், அவர்களுக்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகள் மூலம் அவர்களை சாதாரண நிலைக்கு கொண்டுவர முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர்கள் வெங்கடேசன், தங்கவேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகந்தி, மேற்பார்வையாளர் வசுமதி மற்றும் அரசு மருத்துவர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: