முசிறி அருகே மண்பறையில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டுபிடிப்பு

தா.பேட்டை: முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பாபு என்பவர் கூறியிருப்பதாவது: முசிறி அருகே மண்பறை கிராமத்தில் பல வரலாற்று தொன்மை சின்னங்களை கொண்டிருப்பது முன்னரே கண்டறியப்பட்டது. அந்த வகையில் களஆய்வு மேற்கொண்டபோது இவ்வூர் சிவன் கோயில் அருகே நத்தம் என்ற பகுதியில் முற்காலத்தில் மக்களின் குடியிருப்புகள் இருந்தமைக்கான தொல்லியல் எச்சங்கள் முதுமக்கள் தாலியின் உடைந்த பாகங்கள் மண்பாண்டங்களின் ஓடுகள் போன்றவை காண கிடைக்கின்றன.

மேலும் இக்கள ஆய்வின்போது 5 அடி உயரமுள்ள நெடுங்கல் ஒன்று கண்டறிப்பட்டது. அதில் வைணவ சமயத்தின் அடையாளமான சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. இது வைணவ கோயிலின் இறையிலி நிலத்தின் எல்லையை குறிப்பிடும் எல்லைக்கல் ஆகும். இது திருவாழிக்கல் என அழைக்கப்படும். தமிழகத்தை ஆண்ட அரசர்கள் முற்காலத்தில் கோயிலுக்காக தேவதானமாக நன்கொடைகளை வழங்கி உள்ளனர் என்பதை பல கல்வெட்டுகளும், செப்பேடுகளும் எடுத்து கூறுகின்றன. அவ்வாறு தானமாக வழங்கப்படும் நில எல்லையின் நான்கு புறங்களிலும் சைவ சமய கோயிலின் சூலம் பொறிக்கப்பட்ட கல்லும் வைணவ கோயிலாக இருப்பின் சங்கு சக்கரம் பொறிக்கப்பட்ட கல்லும், நடப்படுவது வழக்கம். வைணவ கோயிலுக்கு வழங்கப்படும் நன்கொடை திருவிடை ஆட்டம் என்று அழைக்கப்படும். சங்கு கண்டயறிப்பட்ட திருவாழிக்கல் முற்காலத்தில் இப்பகுதியில் வைணவ கோயில் இருந்துள்ளதை உறுதி செய்யும் சான்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திருவாழிக்கல்லில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. இத்தகைய தொன்மை சான்றுகள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: