மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.10,000 ஆக உயர்வு: போக்குவரத்து விதிமீறலுக்கு 10 மடங்கு அபராதம்

புதுடெல்லி: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராதம் 10 மடங்கு வரை புதிய மசோதாவில் உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. புதிய மோட்டார் வாகன சட்ட மசோதா கடந்த 2017ம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அந்த மசோதா தேர்வுக்கு குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, சில பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு மாநிலங்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதா மீதான விவாதம் முடியவில்லை. இதனால், மோடியின் முதல் ஆட்சியில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

தற்போது, இந்த மசோதாவை  நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய மசோதாவில் 60க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 20 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து விதிமுறைகளை புதுப்பிக்கவும், சாலை பாதுகாப்பை பராமரிக்கவும்,  ஊழலை ஒழிக்கவும், சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், கணிசமான அபராதம் விதிப்பதற்காகவும், இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும், 18 மாநிலங்களின் போக்குவரத்து துறை அமைச்சர்கள் பரிந்துரை செய்துள்ளனர். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டுவது, அபாயகரமாக ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அளவுக்கு அதிகமான வேகத்தில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் விதித்தில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. அவற்றின் விவரம்:

* அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

* ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். வாகன ஓட்டுநர் உரிமம் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படும்.

* ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

* போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.100,் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுகிறது.

* போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயல்பட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* மது போதையில் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

* வாகனத்தில் அளவுக்கு அதிகமாக சரக்கு எடுத்து சென்றால் விதிக்கப்படும் அபரதாம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. கூடுதலாக ஏற்றப்பட்ட ஒவ்வொரு டன்னுக்கும் ₹2 ஆயிரம் விதிக்கப்படும்.  

* போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் சாலை விதிமுறை மீறல் குற்றம் புரிந்தால், அபராத தொகையை இரட்டிப்பாக விதிக்கப்படும்.  

* சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

* வாகனங்களுக்கான 3ம் நபர் காப்பீட்டில், விபத்தில் பலி சம்பவம் நடந்தால் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். காயம் ஏற்பட்டால் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

* வாகனம் ஓட்டுதல் பயிற்சி விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

* விபத்தில் சிக்குபவர்களை மீட்டு, உதவுபவர்களுக்கு தொல்லைகள் ஏற்படாத வகையில் புதிய மசோதாவில் விதிமுறைகள் சேர்க்கப்படுகின்றன.

* தவிர்க்க முடியாத விபத்துக்களுக்காக, ரோட்டில் பயணம் செய்யும் அனைவருக்கும் கட்டாய காப்பீடு கிடைக்கும் வகையில் விதிமுறைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த காப்பீடுகளை கோருவதற்கு 6 மாத காலம் அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* மாசுவை குறைப்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்கள், மாற்று தொழில்நுட்பம், புதுமை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்ட மசோதாவில் விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

* வாகன ஓட்டுனர் உரிமம் பெறவும், வாகன பதிவுக்கும் ஆதார் கட்டாயமாகிறது.

* வாகன உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலமும், காலாவதி தேதிக்கு முன்போ அல்லது பின்போ ஓராண்டு வரை அதிகரிக்கப்படுகிறது.

* கால் டாக்சி நிறுவனங்கள், வாகன ஓட்டுநர் உரிமங்கள் விதிமுறைகளை மீறினால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

* விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச் செல்லும் வழக்குகளில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் வகையில் புதிய விதிமுறைகள் சேர்க்கப்படுகின்றன.

* விபத்தில் உயிர் பலிக்கு ரோடுகளில் உள்ள குறைபாடு காரணம் என கண்டறியப்பட்டால், கான்ட்ராக்டர்கள் அல்லது ஏஜென்சிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த திருத்தங்கள் புதிய மசோதாவில் சேர்க்கப்படுகின்றன.

சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயதை எட்டும் முன்பாகவே விதவிதமான கார், பைக்குகளை வாங்கி கொடுக்கின்றனர். இவர்கள் கட்டுப்பாடின்றி சாலைகளில் வாகனத்தை ஓட்டி, அதிகளவில் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். உயிர் பலிகளையும் வாங்கின்றனர். இதனால், மசோதாவில் சேர்க்கப்பட உள்ள அம்சங்களில் மிகவும் முக்கியமானதாக, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அந்த வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும். அந்த சிறுவனின்  பாதுகாவலர்/ வாகன உரிமையாளரும் குற்றம் புரிந்தவராக கருதப்படுவார். அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

Related Stories: