திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சியால் ஆடுகளுடன் ஊரைவிட்டே புறப்பட்ட மக்கள்: நாடோடி வாழ்க்கைக்கு மாறும் அவலம்

பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சியால் மக்கள் நாடோடிகளாக மாறி, தாங்கள் வளர்த்த ஆடுகளுடன் ஊரை விட்டு புறப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால், மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கோடை வெயிலின் உக்கிரம் தினமும் சதம் அடித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம்  அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில் காட்டில் வாழும் விலங்குகளும் ஊருக்குள் வந்து பொதுமக்களை சிரமப்படுத்தி வருகிறது.  பெரணமல்லூர் அடுத்த மேல்நெமிலி கிராமத்தில் பெரும்பாலானோர் ஆடுகள் வளர்த்து அதன் மூலம் வாழ்வாதாரம் பெற்று வந்தனர். தற்போது நிலவி வரும் வறட்சியால் உரிய தீவனம் கிடைக்காமல் ஆடுகள் வளர்க்க சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆடுகளை ஓட்டிக்கொண்டு நாடோடிகளை போல வெளியூர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். நேற்று பெரணமல்லூர் நோக்கி ஆடுகளை ஓட்டி சென்ற மேல்நெமிலி பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறோம். மழைக்காலங்களில் எங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள், வயல்வெளிகளுக்கு ஓட்டிச்சென்று புல்களை தீவனமாக கொடுத்து வந்தோம். மேலும், அவற்றின் சாணங்களை வயலுக்கு உரமாக்கி அதன் மூலம் கிடைக்கும் கூலித்தொகையை பெற்று வாழ்க்கை நடத்தி வந்தோம். பருவமழை பொய்த்து விட்டதால் விவசாயிகளும் எங்களை கூப்பிடுவதில்லை. எங்களுக்கு ஆடுகளை மேய்ப்பது தவிர வேறு தொழிலும் தெரியாது. இந்த வருடத்தில் மீண்டும் கோடை மழை பொய்த்து விட்டதால் ஆடுகளுக்கு உரிய தீவனம் கிடைக்காமல் அவற்றை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல்  கவலை அடைந்துள்ளோம்.

இதையறிந்து எங்கள் ஊரில் ஆடுகள் வளர்ப்பவர்கள் ஒன்று கூடி ஒரு முடிவை எடுத்தோம். மாவட்டத்தில் எங்கெல்லாம் மழை பெய்தது என்பதை தெரிந்து அந்த பகுதிக்கு ஆடுகளை ஓட்டிச்சென்று  அங்குள்ள ஏரி, குளக்கரை பகுதிகளில் வளரும் புல்வெளிகளில் ஆடுகளை மேய்த்து  காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம். அதன்படி, கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் ஆரணி, களம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழுக்களாக சென்றுள்ளனர். நாங்கள் பெரணமல்லூர் வழியே எங்கு மழை பெய்தது என்பதைக் கண்டறிந்து ஆடுகளை ஓட்டிச் செல்கிறோம். இதுதவிர இரவு நேரங்களில் ஏதாவது ஊரில் தங்கி அங்கு ஓய்வு எடுத்துக் கொள்வோம்.

அங்குள்ளவர்கள் இரக்கப்பட்டு கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு மறுநாள் பயணத்தை தொடங்குவோம்.  முன்பெல்லாம் வயல்களில் ஆடுகளின் சாணத்தை உரமாக்க இரவு நேரத்தில் பட்டி மடக்கி அவர்கள் தரும் கூலியை வைத்து வாழ்ந்தோம். ஆனால் இன்று நிலைமை வேறு, மழை பொய்த்ததால் விவசாயிகளும் எங்களை கூப்பிடுவதில்லை.

தற்போது நாடோடி வாழ்க்கையை தொடங்கிய இந்த பயணம் எப்போது முடியும், எப்போது வீடு திரும்புவோம் என்று எங்களுக்கு தெரியாது. தினமும் எந்தப் பக்கத்தில் மழை பெய்துள்ளது என கேட்டுக் கொண்டே எங்கள் பயணத்தை தொடங்குவோம். அதுவரை எங்கள் குடும்பத்தினர் ஏதாவது கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இந்த நாடோடி பயணத்தை தொடங்கி உள்ளோம் என்றனர்.

Related Stories: