மத்திய ஆயுதப் படைகளில் 84,000 காலி பணியிடங்கள்: மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: மத்திய துணை ராணுவப் படையில் காலியாக உள்ள 84 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.  மத்திய  துணை ராணுவப் படையில் மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை, சாஸ்திர சீமா பால், இந்தோ- திபெத்திய எல்லை போலீஸ் படை போன்றவை இடம் பெற்றுள்ளன. இவற்றில் தற்போதைய நிலவரப்படி 84 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: மத்திய ஆயுதப் படையில் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், மற்றும் இறப்பு உள்ளிட்ட காரணங்களால் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது, 84 ஆயிரத்து 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த படையில் 10 சதவீதம் அளவுக்கு காலியிடங்கள் அதிகரித்து வருகிறது. இந்த காலி இடங்களும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களையும் நிரப்ப அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் 58,268 கான்ஸ்டபிள் பணியிடங்கள், மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் (எஸ்எஸ்சி) மூலம் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் காலியாக இருந்த 58,373 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு,  எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த 2018ம் ஆண்டில் 1094 சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை (எஸ்எஸ்சி) மூலமும், 466 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை யுபிஎஸ்சி மூலம் நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 323 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: