நீட் தேர்வு விலக்கு தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தீர்மானங்களை உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா நேற்று வலியுறுத்தினார். எம்.பி.பி.எஸ் முதலான இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடத்தப்படுவது நீட் நுழைவுத் தேர்வு. இந்த தேர்விற்கு இன்னும் மாநில மாணவர்கள் தயாராகவில்லை அதனால் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. மேலும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகத்தின் தரப்பில் அவசர சட்டமும் இயற்றப்பட்டு அதன் தீர்மானங்களையும் ஜனாதிபதி ஒப்புதல் வழங்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று திமுக எம்பி திருச்சி சிவா, இதுதொடர்பாக பேசியதாவது: தமிழகத்தில் இருந்து சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்த முறை நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில் அவர்களின் மொத்தம் 6 லட்சம் பேர் மட்டும்தான் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் தனியாக சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்றவர்கள். இதுபோன்ற வகுப்புகள் ஒரு மாணவருக்கு சுமார் 2 லட்சம் வரை வசூல் செய்கின்றனர். இதனை மொத்த மாணவர்களுக்கு கணக்கிட்டால் 12 ஆயிரம் கோடியை தாண்டும். இதுபோன்று, நீட் தேர்வை மையமாக வைத்து தனியார் பலர் சம்பாதிக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாத ஏழை எளிய மாணவர்கள் இந்த நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் 5 மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

 எனவே தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவை ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கக்கூடிய இரண்டு தீர்மானங்களையும் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்காமல் இருப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான ஒன்றாகும். இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.

Related Stories: