புதுச்சேரி அமைச்சரவை கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: புதுச்சேரி அமைச்சரவை கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமை யிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை. இது தொடர்பாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநர் கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை கோரிய கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்தது. அதுமட்டுமல்லாது, இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இதனால், இடைக்கால தடை விதிக்காவிட்டால் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, ஜூன் 7ம் தேதி புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை 10 நாட்களுக்கு அமல்படுத்த தடை விதித்த உச்சநீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடையால் பல முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. எனவே, இந்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி அமைச்சரவை கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடையை ஜூலை 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: