நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி சேலத்தில் அதிரடி மாணவர்கள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் அணிய கல்லூரி தடை: திருப்பி அனுப்பியதால் சாலை மறியல்

சேலம்: ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட் அணிய சேலத்தில் தனியார் கல்லூரி தடை விதித்து திருப்பி அனுப்பியதால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் உடையாப்பட்டி அருகே இயங்கும் தனியார் கல்லூரி நிர்வாகம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாணவர்களின் பெற்றோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், நீதிமன்ற உத்தரவின்படி தங்களது குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பும்போது, நல்ல ஆடை அணிந்து வரும் படி அறிவுறுத்த வேண்டும். தலைமுடியை அழகாக வெட்டியிருக்க வேண்டும். ஜீன்ஸ் பேன்ட்,  டி சர்ட் அணியக் கூடாது. மாணவிகள் லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளும் அணியக் கூடாது. கல்லூரியில் மகன் மற்றும் மகளை சேர்க்கும்போது நீங்கள் கொடுத்த உறுதி மொழியை பின்பற்ற வேண்டும். இல்லாத பட்சத்தில் டிசி (மாற்றுச்சான்றிதழை) வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர்.

நேற்று முன்தினம் கல்லூரி திறக்கப்பட்டது. மாணவர்களில் 100க்கும் மேற்பட்டோர் சரியாக முடிவெட்டாமலும், பூந்தொட்டி (பாக்ஸ் கட்டிங்) போன்று வெட்டிக்கொண்டும், ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட் அணிந்தும் வந்தனர். இவர்கள் அனைவரையும் அழைத்த நிர்வாகம், நல்ல ஆடை அணிந்து வாருங்கள் என கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் அதே போன்று வந்த மாணவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து சேலம்- ஆத்தூர் ரோட்டில் நேற்று காலை 11 மணி அளவில் மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அம்மாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று மாணவர்களை சமாதானப்படுத்தினர்.இதையடுத்து மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: