சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் விழா

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை வைகையாற்றில் நீராடிய  பக்தர்கள், பின்னர் 4 ரத வீதிகள் வழியாக  பால்குடம், அக்னி சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். வழி நெடுகிலும் பல்வேறு அமைப்பினர் சார்பில் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் நீராடுவதற்கான ஏற்பாடுகளை எம்.வி.எம். குழுமத் தலைவர் மணி(எ)முத்தையா, தொழிலதிபர் வள்ளிமயில், எம்.வி.எம்.கலைவாணி பள்ளி தாளாளர்  டாக்டர் மருதுபாண்டியன் செய்திருந்தனர். வைகையாற்றில் குளிப்பதற்குரிய தண்ணீர் வசதியை வழக்கறிஞர் சிவா செய்திருந்தார்.

அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்து வசதியை அரசு போக்குவரத்து கழகத்தினர் செய்திருந்தனர். விழா முக்கிய நிகழ்ச்சியாக இன்றிரவு வைகையாற்றில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். 25ம் தேதி காலை தேரோட்டமும், 26ம் தேதி இரவு வைகையாற்றில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுசீலாராணி, கணக்கர் பூபதி, அர்ச்சகர் சண்முகவேல் மற்றும் வசந்த், முருகன், மருதுபாண்டி, சுபாஷினி உள்ளிட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: