இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக விடிய விடிய நடந்தது மதுரை வாலிபரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

மதுரை: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த 12ம் தேதி கோவையில் முகமது அசாருதீன் (32),  சதாம் உசேன் (26), அக்ரம் ஜிந்தா (26), அபுபக்கர் (29), இதயத்துல்லா (38), இப்ராஹீம் (28) ஆகியோரது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென்டிரைவ்கள், 300 ஏர்கன் புல்லட்டுகள்  உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

தமிழகம் மற்றும் கேரளாவில் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இந்தக் கும்பலுக்கு முகமது அசாருதீன் தலைவராக செயல்பட்டதும் தெரியவந்தது. இவர்களில், அசாருதீன் தனது முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக  கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.இலங்கை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகவும், மனித வெடிகுண்டாகவும் செயல்பட்ட ஜஹரான் ஹாஷிம் என்பவருடன் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளார். இதையடுத்து, முகமது அசாருதீனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை  நடத்தியதில் இவருடன் தொடர்புடைய கோவை, உக்கடம் வின்சென்ட் சாலையை சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா ஆகிய 3 பேரை கோவை போலீசார் கைது செய்தனர்.
Advertising
Advertising

கைது செய்யப்பட்ட முகமது அசாருதீனின் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சதக் அப்துல்லா என்பவரின் மகன் முர்ஷித் (20) என்பவருக்கும் தொடர்பு இருப்பது  தெரியவந்தது. இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்த சதக் அப்துல்லாவை நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது மகன் முர்ஷித்தை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் முர்ஷித்தை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விடிய, விடிய விசாரணை நடத்தினர்.  தொடர்ந்து நேற்று காலை வாலிபரை அவரது வீட்டில் விட்டுச்சென்றனர். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் உடனே வர வேண்டும் என முர்ஷித்திடம் அதிகாரிகள் தெரிவித்து சென்றனர்.

கோவையில் கைதான 3 பேரை காவலில் எடுக்க திட்டம்

கோவையில் கைதான ஷாஜகான் (27), முகமது உசேன் (29), ஷேக் ஷபியுல்லா (27) ஆகியோர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக இவர்களிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.சி) போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு  அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இவர்களுக்கு நட்பு வட்டாரம் உள்ளதாகவும், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 3 பேரும் தற்கொலை படை நடத்த திட்டமிருந்ததும் தெரியவந்தது. இதுதவிர,  உளவுப்பிரிவு போலீசார் சிலரை கொல்ல சதி திட்டம் தீட்டியதும், வெடிகுண்டுகளை தயார் செய்து ேகாவை நகரில் பல்வேறு இடங்களில் வெடிக்க வைக்க திட்டம் போட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களை போலீசார் காவலில்  எடுத்து விசாரிக்க உள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘தீவிரவாத கும்பலுடன் சிலர் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், தாக்குதல் உத்தரவு உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து, நகரில் ‘அலர்ட்’  உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கைதான 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களின் தொடர்பில் யாராவது இருந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்’’ என்றனர்.

Related Stories: