ரூ.6 கோடியில் கட்டப்பட்டது பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் மருத்துவமனை: புழல் மக்கள் வேதனை

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 23வது வார்டு அலுவலக வளாகத்தில், மாநகராட்சி சார்பில் சுமார் ₹6 கோடி மதிப்பில், கடந்த ஆண்டில் 150 படுக்கை வசதி மற்றும் 3 மாடிகளுடன் கூடிய அவசரகால சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது.இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டால் புழல், செங்குன்றம், பம்மதுகுளம், பொத்தூர், வடகரை, பாலவாயல், விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம், கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விபத்து மற்றும் பல்வேறு அவசரகால சிகிச்சைகளுக்காக நீண்ட தூரம் அலையும் மக்கள் பெரிதும் பயனடைவர்.

ஆனால், இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டி முடித்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இம்மருத்துவமனை தமிழக முதல்வரின் காணொலி காட்சி திறப்புக்காக நீண்ட நாள் காத்திருக்கிறது என மாநகராட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் மருத்துவமனையை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: