20 வருடத்திற்கு பிறகு திறக்கப்பட்ட மேலூர் எம்எல்ஏ அலுவலகம்

மேலூர் : மேலூரில் 20 வருடத்திற்கு பிறகு எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டது. மேலூர் சிவகங்கை ரோட்டில் 20 வருடத்திற்கு முன்பு அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ ராஜமாணிக்கம் பொறுப்பில் இருந்த போது தொகுதி எம்எல்ஏவுக்காக அலுவலகம் ஒன்று கட்டும் பணி துவங்கியது. அதனை தொடர்ந்து மேலூர் தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த சாமி தேர்தெடுக்கப்பட்டார். புதிய எம்எல்ஏ கட்டிய அந்த கட்டிடத்திற்கு தான் செல்ல விரும்பவில்லை என கூறி விட்டு மேலூர் நகராட்சியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனது அலுவலகத்தை திறந்தார். 3 மாதம் அங்கு செயல்பட்ட அலுவலகம் மேலூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தனியார் இடத்திற்கு மாற்றப்பட்டது. 3 முறை சாமியே எம்எல்ஏவாக தொடர்ந்ததால் அரசு பணத்தில் கட்டப்பட்ட அந்த எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்படவே இல்லை. ஆனால் ஆண்டுதோறும் அந்த அலுவலகத்தை மராமத்து பார்த்ததாக கணக்கு மட்டும் எழுதப்பட்டு வந்தது தனி கணக்கு.

திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அலுவலகம் என்ற ஒரு காரணத்திற்காகவே அவர் இந்த அலுவலகத்திற்கு செல்லவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் மேலூருக்கு அதிமுக சார்பில் பெரியபுள்ளான் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் எம்எல்ஏ தமிழரசனின் டீக்கடையே இவருக்கு அலுவலகமாக இருந்து வந்தது. மெயின் ரோட்டில் இந்த டீக்கடை இருந்ததால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே எம்எல்ஏ அலுவலகத்தை மாற்ற வேண்டும் என மக்கள் கூறி வந்தனர். நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று, கட்டி 20 வருடத்திற்கு பிறகு எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் எம்எல்ஏ பெரியபுள்ளான், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, நகர் செயலாளர் பாஸ்கரன் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர். 20 வருடத்திற்கு பிறகு திறக்கப்பட்ட இந்த அலுவலகத்தில் தற்போதைய எம்எல்ஏ பணியை தொடருவாரா பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: