நாடாளுமன்றத்தில் கூட்டாக போராட முடிவு சிறப்பு அந்தஸ்து கேட்டு அணி சேரும் மாநிலங்கள்: பிஜு ஜனதா தளம் புதிய வியூகம்

புவனேஸ்வர்; தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராடி வரும் பீகார், ஆந்திராவுடன் இணைந்து போராட ஒடிசாவின் பிஜு ஜனதா தளமும் முடிவு செய்துள்ளது.பீகார், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள், தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தி வருகின்றன. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளமும்,  பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசும்  இந்த கோரிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன.சமீபத்தில், ஒடிசாவில்  பானி புயல் கடுமையாக தாக்கியது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு இயற்கை பேரிடர் பாதிப்புகளையும்  தகுதியாக கொள்ள வேண்டும் என பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்த  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தினார். இந்நிலையில், பிஜு ஜனதா தளத்துக்கு மக்களவையில் 12 எம்பி.க்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 16ம், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 22 எம்பி.க்களும் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்  வகிக்கிறது.

மற்ற இரு கட்சிகளும் எந்த கூட்டணியிலும் இல்லை. இதனால், சிறப்பு அந்தஸ்து கேட்டு போராட இந்த 3 மாநில முதல்வர்களும் முடிவு செய்துள்ளனர்.இதற்காக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இணைந்து குரல் எழுப்பவும்  முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பிஜு ஜனதா தளத்தின் நாடாளுமன்ற கட்சி தலைவரும், பூரி தொகுதி எம்பி.யுமான பினாகி மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘3 மாநில கட்சிகளும் பொதுவான கோரிக்கைக்காக போராடும் நிலையில்  அவர்களுடன் கூட்டணி சேர்வதில் என்ன தவறு உள்ளது? எங்கள் 3 கட்சிகளுக்கும் 50 மக்களவை எம்பி.க்களும், மாநிலங்களவையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உறுப்பினர்களும் உள்ளதால் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து குரல்  எழுப்புவோம்’’ என்றார்.

Related Stories: