நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவையடுத்து கர்நாடகாவில் ஒரு நாள் அரசு விடுமுறை; 3 நாள் துக்கம் அனுசரிப்பு

பெங்களூரு : ஞான பீட விருது பெற்ற பிரபல நடிகரும் இயக்குனருமான கிரிஷ் கர்னாட் உடல்நலக்குறைவால் காலமானார். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வசித்து வந்த கிரிஷ் கர்னாட்டின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சில காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், இன்று காலை அவர் திடீர் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 81. மறைந்த கிரிஷ் கர்னாட் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் நான் அடிமை இல்லை, மின்சார கனவு, காதலன், ரட்சகன், காதல் மன்னன், செல்லமே உள்ளிட்ட படங்களில் கிரிஷ் கர்னாட் நடித்துள்ளார். இந்தி, கன்னடம் மொழிகளில் 7 படங்களை இயக்கியுள்ள கிரிஷ் கர்னாட் மேடை நாடகங்களிலும் தனக்கென தனி பெயரைப் பெற்றவர்.

கலைத்துறைக்கு ஆற்றிய சேவைகாக அவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட 10 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மறைந்த கிரிஷ் கர்னாட் உடலுக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிரிஷ் கர்னாட் பன்முகதன்மை உடையவர் என்றும் தன்னுடைய கொள்கைகளில் உறுதியாக நின்றவர் என்றும் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களிலும் இவரது படைப்புகள் போற்றப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கிரிஷ் கர்னாட் கதைகள் தனக்கு முன் மாதிரியாக இருந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.  கிரிஷ் கர்னாட் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிரிஷ் கர்னாட் மறைவையடுத்து கர்நாடகாவில் ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: