பெற்றோர் வாங்கிய கடனுக்காக உபி.யில் கொடூரம் 3 வயது சிறுமியை கடத்தி கொன்ற வட்டிக்காரர்கள்: 5 போலீசார் சஸ்பெண்ட்

அலிகார்: உத்தரப் பிரதேசத்தில் கடன் வாங்கிய பெற்றோர், அதை திருப்பிச் செலுத்தாததால் அவர்களின் 3 வயது மகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரில் உள்ள டாப்பல் பகுதியை சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவரது 3 வயது மகள் கடந்த 30ம் தேதி திடீரென காணாமல் போனாள். பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியாததால் அவள் கடத்தப்பட்டு இருக்கலாம் என பெற்றோர் அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து டாப்பல் காவல் நிலையத்தில் சர்மா புகார் அளித்தார். ஆனால், 31ம் தேதி தான் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சிறுமியை தேடுவதில் அவர்கள் மெத்தனமாக செயல்பட்டதாக தெரிகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு,  முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு கொடூரமாக சிதைத்து கொல்லப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் குறித்து அலிகார் மூத்த எஸ்பி ஆகாஷ் குல்காரி கூறுகையில், “ கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் ரத்த மாதிரி தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றம் செய்யப்பட்டு இருந்தால் போக்சோ சட்டத்தை பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்,” என்றார். லக்னோ ஏடிஜிபி கூறுகையில், “72 மணி நேரத்துக்கு பின்னரே சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சடலம் அழுகி இருந்தது,” என்றார்.

இதனிடைய, சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் என கருதப்படும் ஜாகித்,  அஸ்லாம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஜாகித்திடம் சிறுமியின் பெற்றோர் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். அதை அவர்கள் திருப்பி கொடுக்காததால் ஆத்திரமடைந்த ஜாகித்தும், அஸ்லாமும், பெற்றோரை பழி தீர்ப்பதற்காக சிறுமியை கடத்தி கொடூரமாக கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, குற்றவாளிகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சிறுமி கடத்தப்பட்டதாக பெற்றோர் புகார் கொடுத்தும் அலட்சியமாக செயல்பட்ட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை பதிவு செய்வதில் தாமதம் செய்தது, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பிறகும் விசாரணையை தொடங்குவதில் தாமதம் செய்தது ஆகிய குற்றத்துக்காக போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக காவல் துறைக்கு சிறுமியின் தந்தை எச்சரித்துள்ளார். அவரை நேரில் சந்தித்த காவல் துறை அதிகாரி இந்த வழக்கில் நீதி நிலைநிறுத்தப்படும். குற்றவாளிகள் விரைவில் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்படுவர் என்று அறிவுறுத்தினார். இந்த வழக்கை விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராகுல், பிரியங்கா ஆவேசம்

சிறுமி கொலை  சம்பவத்தால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேதனை அடைந்துள்ளார். இது பற்றி நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அலிகாரில் 3 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சமபவத்தை அறிந்து வேதனை அடைந்தேன். அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. எப்படி ஒரு மனிதனால் ஒரு குழந்தையிடம் இதுபோன்று மிருகத்தனமாக நடந்து கொள்ள முடியும்? இந்த பயங்கரமான கொலை செய்தவரை தண்டிக்காமல் விடக்கூடாது. உத்தரப் பிரதேச போலீசார் விரைவில் கொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த பயங்கர கொலை, மனித தன்மையற்ற மற்றொரு செயல். சிறு குழந்தைக்கு எதிரான இந்த குற்றம் விவரிக்க முடியாதது. அந்த குழந்தையின் பெற்றோர் உணர்ந்த வலியை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என கூறியுள்ளார்.

‘வெட்கக்கேடான செயல்’

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், ‘‘இது மிகவும் வெட்கக்கேடான,  வேதனைக்குரிய விஷயம். உத்தரப் பிரதேச அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

Related Stories: