மறியல் காரணமாக காரை நிறுத்தியதால் மோதல் எம்எல்ஏவுக்கு மரியாதையே இல்லையா? திருப்பூர் போலீஸ் அதிகாரியிடம் அதிமுக எம்எல்ஏ கடும் வாக்குவாதம்

திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் வந்தார். அப்போது நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மறியல் நடைபெற்று கொண்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகம் எதிரில் போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்து நெரிசல் காரணமாக எம்.எல்.ஏ. குணசேகரனின் காரை ஒரு நிமிடம் நிறுத்தும்படி சிக்னல் காட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் நடுரோட்டில் காரில் இருந்து இறங்கி வந்து கலெக்டர் அலுவலக வாசலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த தெற்கு சரக உதவி கமிஷனர் நவீன்குமாரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது குணசேகரன், சட்டமன்ற உறுப்பினர் கார் அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து, `இந்த அடையாள அட்டைக்கு மரியாதை இல்லை. வேண்டுமென்றால் கிழித்து விடுங்கள்’ எனக் கூறினார்.  மேலும், `இன்னும் 7 எம்.எல்.ஏ. கூடுதலாக கிடைத்திருந்தால் நான் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றிருப்பேன். போக்குவரத்தை மதிக்காமல் சென்றால் எம்.எல்.ஏ என்ற மிடுக்கில் செல்வதாக பொதுமக்கள் திட்டுவார்கள், எம்.எல்.ஏ எல்லோரிடமும் திட்டு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் கவனத்தோடு செயல்படுங்கள்’ என்று விரக்தியில் பேசினார்.  பின்னர் எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் கேட்டபோது, ``இதெல்லாம் சாதாரணம். ஆய்வு கூட்டத்திற்கு உள்ளே வந்து பாருங்கள் இதைவிட பயங்கரமாக இருக்கும்’’ என்றுகூறிவிட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றார்.

Related Stories: