கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குகிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குகிறது. இந்த வருடம் மிக பலத்த மழை பெய்யும் என்று கண்டறியப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் பிரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்த வருடம் 6 நாட்கள் தாமதமாக 6ம் தேதி தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மேலும் 2 நாட்கள் தாமதமாக 8ம் தேதி தான் பருவமழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் கேரளாவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த வருடம் வழக்கமாக பெய்யும் அதே அளவு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சராசரியாக இந்த 4 மாதங்களில் 203 சென்டி மீட்டர் மழை பெய்யும். கடந்த வருடம் கேரளாவில் மிக பலத்த மழை பெய்தது.

இதனால் இந்த 4 மாதங்களில் சராசரியாக 251 செ.மீ. மழை பெய்தது. இது சராசரியை விட அதிகமாகும். முதலில் கோழிக்கோடு மாவட்டத்தில் தொடங்கும் மழை இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களிலும், நாளை திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், 10ம் தேதி பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழையாக பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கொல்லம் ஆலப்புழா மாவட்டங்களிலும், 10ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் முதல் நவம்பர் வரை கேரளாவில் வடகிழக்கு பருவ மழை பெய்யும். இந்த மாதங்களில் சராசரியாக 46 செ.மீ. மழை பெய்யும். ஆனால் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை 3 செ.மீ. குறைவாகவே பெய்தது.

Related Stories: