ராபர்ட் வதேரா சொத்துக்கள் வெளிநாட்டு அமைப்புகளிடம் விவரம் கேட்கிறது அமலாக்கத்துறை

புதுடெல்லி: ராபர்ட் வதேரா, இங்கிலாந்தில் 6க்கும் மேற்பட்ட சொத்துக்களை நிதி மோசடி மூலம் வாங்கி குவித்துள்ளார் என்பதை கண்டறிந்துள்ள அமலாக்கத்துறை, இதன் நிதி பரிமாற்றத்துக்கான விவரங்களை அளிக்கும்படி பல நாட்டு நிதி புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளது. இதன் மூலம் ராபர்ட் வதேரா மீதான அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுலின் தங்கை பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, தொழிலதிபராக உள்ளார். இவர் லண்டனின் பிரயான்ஸ்டன் சதுக்கத்தில் ரூ.16 கோடி மதிப்பில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாக குற்றம் சாட்டிய அலாக்கத்துறை, இது தொடர்பாக அவரிடம் பல முறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் ராபர்ட் வதேராவுக்கு இங்கிலாந்தில் மேலும் பல சொத்துக்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளன.

 

இதில் ஒரு வீட்டின் மதிப்பு ரூ.44 கோடி என்றும், மற்றொரு வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி என்றும், இவைகள் தவிர மேலும் 6 பிளாட்டுகள் இருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்த சொத்துக்களை வாங்குவதற்கு ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய நபர்கள் சைப்ரஸ் நாட்டிலிருந்து துபாய்க்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்துள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

இந்த சொத்துக்கள் வாங்கியது தொடர்பான முழு விவரங்களையும் அளிக்கும்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான நிதி பரிமாற்றங்கள் குறித்த விவரங்களை அளிக்கும்படி பல நாட்டு நிதி புலனாய்வுத்துறை அதிகாரிகளின் உதவியை அமலாக்கத்துறை நாடியுள்ளது.  

இந்த சொத்துக்களை கடந்த 2017ம் ஆண்டு ஹவாலா முறையில் வாங்க என்.ஆர்.ஐ தொழிலதிபர் சி.சி.தம்பி என்பவர் உதவியுள்ளதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இவர் ஐ.மு. கூட்டணி தலைவர் சோனியாவின் உதவியாளர் மூலம் ராபர்ட் வதேராவை சந்தித்துள்ளார். இவர் அன்னிய செலாவணி சட்ட விதிமுறை மீறல் மூலம் கேரளாவில் ரூ.1000 கோடிக்கு நிலங்களை வாங்கியுள்ளார்.

 

இது தொடர்பாக விசாரிக்க தம்பிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தனது உடல்நிலை சரியில்லாததால் விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் கேட்டுள்ளார் தம்பி. ஆனால் இங்கிலாந்து சொத்துக்கள் குறித்து ராபர்ட் வதேரா கூறுகையில், ‘‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்காக நான் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். பரபரப்புக்கும், தேவையற்ற நாடகத்துக்கும் நான் ஆளாக்கப்பட்டு வருகிறேன்’’ என கூறியுள்ளார்.

Related Stories: