மின்னணு வாக்கு இயந்திரம் குறித்து புகார் தருவோரையே மிரட்டும் தேர்தல் விதி மாற்றப்படுமா? தலைமை தேர்தல் ஆணையர் பதில்

புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரம் குறித்து புகார் தருவோரையே மிரட்டும் வகையில் உள்ள தேர்தல் விதி 49எம்ஏ-யை மாற்றுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதிலளித்துள்ளார். மின்னணு வாக்கு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள வாக்கு ஒப்புகை சீட்டு (விவிபேட்) இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

வாக்காளர்கள் ஓட்டு போட்டதும், அவர் ஓட்டளித்த கட்சி சின்னம் விவிபேட் சீட்டில் காட்டப்படும்.  இவ்வாறு விவிபேட் சீட்டில் தவறான சின்னம் காட்டினால், மின்னணு வாக்கு இயந்திரம் குறித்து வாக்காளர் உடனடியாக தேர்தல் அதிகாரியிடம் புகார் தரலாம். அதுகுறித்து உடனே ஆய்வு செய்யப்படும்.

ஆனால், வாக்காளர் தவறான புகார் கூறியிருந்தால், தேர்தல் விதி 49 எம்ஏ-வின் படி அவருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். இது, புகார் அளிப்பவரையே மிரட்டும் தொனியில் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் விதி 49எம்ஏ குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி கேட்ட போது, ‘‘தற்போது தேர்தல் முடிந்துள்ளது. இனி நாங்கள் ஆணையத்திற்குள் ஆலோசித்து, இந்த விதியை எளிமைப்படுத்துவது குறித்து முடிவெடுப்போம். நாங்கள் மீண்டும் அதை ஆய்வு செய்வோம்.

இந்த விதியில் தண்டனை வழங்கும் வழிவகை இருந்தாலும், அதை தேர்தல் ஆணையம் நீண்டகாலமாக பயன்படுத்தாமலேயே பார்த்துக் கொள்கிறது.

பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் தேர்தல் நடவடிக்கையை யாரும் தாமதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக தண்டனை என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இல்லாவிட்டால், பொய்யான குற்றச்சாட்டுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு’’ என அவர் பதிலளித்தார்.

Related Stories: