ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பும் பாலில் நீர் கலந்து பல கோடி மோசடி

ஆரணி: ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பும் பாலில் தண்ணீர் கலந்து பல கோடி மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி  ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவில் ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் நிர்வாகக் குழு தலைவர், துணைத்தலைவர் உட்பட உறுப்பினர்கள் 9 பேர் உள்ளனர். இங்கு, தினமும் 7 முதல் 8 ஆயிரம்  லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 5 முதல் 6 ஆயிரம் லிட்டர் பால் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி  கூட்டுறவு சங்கத்தில் இருந்து டேங்கர் லாரி மூலமாக சென்னைக்கு 5 ஆயிரத்து 500 லிட்டர் பால் அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை செய்ததில்  பாலில்  அதிகளவு தண்ணீர் கலந்து தரமற்று இருந்தது தெரியவந்தது. உடனே, பாலை ஆரணி பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அப்போது, பிரச்னை வராமல் இருக்க திரும்பி வந்த பால், ஆரணி கமண்டல நாகநதியில் ஊற்றி அழித்ததாக கூறப்படுகிறது. மேலும், பாலில் தண்ணீர் கலப்பது குறித்து கடந்த 2ம் தேதி ஆரணி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.  தகவல் அறிந்த ஆவின் நிர்வாகம்  பிரச்னையை துறை ரீதியாக பார்த்து கொள்வதாக கூறி புகாரை வாபஸ் பெற கூறியதால், நேற்று முன்தினம் அந்த புகார் திரும்பி பெறப்பட்டது.

 

இதற்கிடையில் சங்க நிர்வாகிகளில் ஒரு சிலர், கடந்த 5 ஆண்டுகளாக அம்பத்தூர் ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பும் பாலில் தினமும் 300 லிட்டர் தண்ணீர் கலந்து மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் பல கோடி மோசடி நடந்து உள்ளது என பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள்  தெரிவிக்கின்றனர். எனவே, துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: