கர்நாடகாவில் தப்பியோட முயன்ற வழிப்பறி கொள்ளையன் மீது காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு

பெங்களூர்: கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே தப்பியோட முயன்ற வழிப்பறி கொள்ளையன் மீது காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி ஓசூர் சாலையில் இளைஞர் ஒருவர் வழிப்பறியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதையறிந்த அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் இருந்து உதவி ஆய்வாளர் பாலாஜியும், தலைமை காவலர் பிரகாஷும் கொள்ளையனை பிடிக்க சென்றனர். அப்போது தாக்குதலில் ஈடுபட்ட கொள்ளையன் தலைமை காவலர் பிரகாஷை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தப்பியோட முயன்ற கொள்ளையனை எச்சரிக்கை செய்வதற்காக துப்பாக்கி எடுத்த பாலாஜி வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார். ஆனால் கொள்ளையன் சரணடையாததால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் கால்பகுதியில் குண்டு பாய்ந்த கொள்ளையனும், கத்தி குத்தில் காயமடைந்த தலைமை காவலரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்டது பெங்களூரை சேர்ந்த சேசாங் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: