13 பேருடன் சென்ற விமானப் படை விமானம் மாயம்

புதுடெல்லி: அசாமில் இருந்து 13 பேருடன் புறப்பட்டு சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் மாயமானது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹத் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான  ஏஎன்-32 என்ற விமானம் நேற்று பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்றது. அருணாசல பிரதேசத்துக்கு சென்ற இந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 13 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்டு சென்ற 35 நிமிடத்துக்கு பின்னர் விமான கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அது, விபத்தில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விமானப்படையின் இதே ரக விமானம் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி, சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து, அந்தமானில் உள்ள போர்ட் பிளேயருக்கு 29 பேருடன் சென்றது.

அப்போது, அந்த விமானம் மாயமானது. வங்கக்கடலில் 3 மாதமாக தேடியும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், தேடும் பணி கைவிடப்பட்டு, அதில் பயணம் செய்தவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். இந்த ரக விமானம் கடந்த 1976ம் ஆண்டுக்குப்பின் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்டவை. இந்திய விமானப்படையில் உள்ள பழமையான போக்குவரத்து விமானங்களில் இதுவும் ஒன்று.

Related Stories: