வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களுக்கு சுஷ்மா பாணியில் உதவும் ஜெய்சங்கர்: டிவிட்டர் கலாசாரம் தொடர்கிறது

புதுடெல்லி: கடந்த முறை மோடி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் இருந்தபோது, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் யாராவது அவரது டிவிட்டரில் உதவி கோரினால், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். இதன்மூலம், டிவிட்டரில் எளிதில் தொடர்பு கொள்ளும் அமைச்சர் என்ற பெயர் சுஷ்மாவுக்கு கிடைத்தது. தற்போது புதிதாக பதவியேற்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இதே பாணியில், உதவி தேவைப்படுவோருக்கு டிவிட்டரில் உடனடியாக உதவி செய்கிறார். இத்தாலிக்கு சென்று தனது குடும்பத்தினர் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டதாக மகாலட்சுமி என்ற பெண், ஜெய்சங்கருக்கு டிவிட் செய்தார்.

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள இந்திய தூதர், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார் என பதில் அளித்த ஜெய்சங்கர், இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்தின் டிவிட்டர் முகவரியையும் இணைத்து அதில் தொடர்பு கொள்ளும்படி பதில் அளித்துள்ளார். இதேபோல், குவைத்துக்கு சென்ற கணவர் நீதிமன்ற சம்மனுக்கும் பதில் அளிக்கவில்லை என ஜெய்சங்கரிடம் ஒரு பெண் கூறியிருந்தார். அவருக்கும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் டிவிட்டர் முகவரியை கொடுத்து தொடர்பு கொள்ளும்படியும், இதற்கான நடவடிக்கையை இந்திய தூதரகம் எடுத்து வருவதாகவும் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். 

Related Stories: