மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்குகிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா தேர்வு : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார்

புதுடெல்லி: டெல்லியில் ேநற்று காலை நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 430 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொண்டர்கள் மட்டுமல்லாது தலைவர்களாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். இதை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்து விட்டது.  இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ராகுல்காந்தி ராஜினாமா முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் அவர் கடந்த ஒரு வாரமாகவே ராஜினாமா முடிவில் பிடிவாதமாகவே இருந்து வருகிறார்.  

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்பிக்கள் குழு கூட்டம் நேற்று காலை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவராக சோனியா காந்தியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார். அதை அனைத்து எம்பிக்களும் வழி மொழிந்தனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாகாந்தி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக கட்சியின் தீவிர பணிகளில் ஒதுங்கியிருந்த சோனியாகாந்தி, தற்போது திடீரென்று எம்பிக்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் சோனியா தீவிர அரசியல் களத்திற்கு வந்துள்ளார். சோனியா காந்தி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவது உறுதியானதை தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: