சர்க்கஸ் செய்யத் தெரிந்தால் சுகாதார நிலையம் போகலாம்

* மூணாறில் சாலை அவ்வளவு மோசம்

மூணாறு :  மூணாறில் அருகே தேவிகுளம் பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார மையம் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் அங்கு செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இதனால் நோயாளிகளை சுமந்து செல்லும் அவலநிலை தொடர்கிறது. மூணாறு அருகே தேவிகுளம் பகுதியில்  ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மூணாறைச சுற்றியுள்ள மறையூர், இடமலைகுடி, வட்டவடை போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் ேமற்பட்ட நோயாளிகள் தினந்தோறும் சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் இடமலைகுடி ஆதிவாசி மக்கள் சிகிச்சை இருக்கும் ஒரே மருத்துவநிலையம் இது தான்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூணாறை புரட்டியெடுத்த கனமழை மூலம் சுகாதார மையம் செல்லும் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்தது. இவ்வாறு சேதமடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில் சாலைகளை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவில்லை. இந்நிலையில் மூணாறில் தற்போது பெய்து வந்த பருவமழை காரணமாக இந்த சாலைகளில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுகாதார மையத்திற்கு நோயாளிகளுக்கான மருந்துகள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டூவீலர் மட்டும் கடந்து செல்லும் அளவிற்கு சாலை உள்ளதால் நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையை கண்டு அப்பகுதி பொதுமக்கள் சாலையோரத்தில் உள்ள கால்வாய்களில் கான்கிரீட் கற்களை அமைத்து கயிற்றில் அந்தந்தரத்தில் சர்க்கஸ் நடப்பவர்கள் போல, கடந்து செல்கின்றனர். இவ்வாறு கடந்து செல்லும் சமயங்களில் சிலநேர விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் சுனில் என்பவர் கூறினார்.

.இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், `` சாலைகளை சரி செய்ய அரசு சார்பாக பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியும் சாலைகள் சரி செய்ய அதிகாரிகள் காலம் தாழ்த்துகின்றனர். ஆரம்ப சுகாதார சாலையை உடனே சரி செய்யவில்லை என்றால் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’’ என்று  கூறினார்.

Related Stories: