சாரதா சிட் பண்ட் வழக்கு சிபிஐ சம்மனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் ராஜிவ் குமார் மனு

கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில், மேற்கு வங்க கூடுதல் டிஜிபி ராஜிவ் குமார் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் சாரதா குரூப் நிறுவனம் சிட் பண்ட் நடத்தி, அப்பாவி மக்களின் ₹2,500 கோடி முதலீட்டை சுருட்டியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த மேற்கு வங்க சிறப்பு புலனாய்வு குழு அதிகாரியான ராஜிவ் குமார், முக்கிய ஆதாரங்களை அழித்து விட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. சில மாதங்களுக்கு முன். கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த அவரிடம் விசாரிக்க சிபிஐ முயன்றது. ஆனால், சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீசார் சிறை பிடித்தனர்.

இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜிவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு விசாரணைக்கு ஆஜரான அவர், ஒழுங்காக பதில் அளிக்கவில்லை. இதனால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ கூறியது. இதனால், ராஜிவ் குமாருக்கு அளிக்கப்பட்டு இருந்த நீதிமன்ற பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கில் நிவாரணம் பெற விரும்பினால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடும்படி ராஜிவ் குமாருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜிவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. 3 நாள் விடுமுறையில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும், தனக்கு அவகாசம் வேண்டும் எனவும் ராஜிவ் குமார் கடிதம் அனுப்பினார். இதற்கிடையே, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ராஜிவ் குமார் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்யும்படி அவர் கோரியுள்ளார்.

Related Stories: