தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் தடுக்கக்கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை விரைவில் உத்தரவு

மதுரை:  தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலை சேர்ந்த அந்தோணி முத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கல்விக்கட்டண குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விபரங்களை வெப்சைட் மற்றும் பள்ளி அறிவிப்பு பலகைகளில் வெளியிடுவதில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விபரம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் விருப்பம் போல கட்டணம் வசூலிக்கின்றனர்.

இதை தடுக்கும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட கல்விக்கட்டண விபரத்தை வகுப்புவாரியாக  கல்வியாண்டின் துவக்கத்திலேயே வெப்சைட்டிலும், பள்ளி அறிவிப்பு பலகையிலும் வெளியிடவும், கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி ஆகியோர், ‘இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்’ என்றனர்.

Related Stories: