மேற்கு தொடர்ச்சி மலையில் வரலாறு காணாத வறட்சி சொட்டு நீரின்றி காய்ந்தது ராமநதி அணை: கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

கடையம்: மழை இல்லாததால், நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடையம் ராமநதி அணை ஒரு சொட்டு தண்ணீர்கூட இன்றி வறண்டு கிடப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மொத்தம் 11 அணைகள் அமைந்துள்ளன.

அவற்றில் முக்கியமான அணைகளில் ஒன்று கடையம் அருகே அமைக்கப்பட்ட ராமநதி அணை. 84 அடி கொள்ளளவு கொண்ட இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. அத்துடன் கடையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டியதால் ராமநதி அணையில் தண்ணீர் 3 முறை நிரம்பி  வழிந்தது. இதனால் கார் பருவ நெல் சாகுபடியும், பிற பயிர்கள் சாகுபடியும் தங்கு தடையின்றி நடந்தது. அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை போக்கு காட்டி ஏமாற்றியது. இருப்பினும் அணையில் இருந்த நீர் இருப்பு மற்றும் அவ்வப்போது மிதமாக பெய்த சாரல் மழையை நம்பி பிசான பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், மழை பொய்த்துப் போனதால் அணையில் இருந்து நீர்மட்டம் படிப்படியாக சரியத் துவங்கியது. கோடை வெயில் கடுமையாகக் கொளுத்தியதால் கடந்த பிப்ரவரி மாதமே அணையில் தண்ணீர் வெகுவாக குறைந்தது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள்முதல் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றது.

இதனால் அணையில் தேங்கிக் கிடந்த சிறிதளவு நீரும் ஆவியாகி, தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வெறும் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இதே போல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.

கடையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீரின்றி அவதிப்படும் மக்களும், வேளாண் சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகளும் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்துள்ளனர்.

10 நாளுக்கு ஒருமுறை மட்டுமே...

ராமநதி அணை  நீரின்றி வறண்ட போதிலும் ஆற்றில் உள்ள ஊற்றுகளை நம்பி உறைகிணறுகளின் வழியாக குடிநீர் விநியோகம் செய்யபட்டு  வருகிறது. இந்த தண்ணீரை ஆற்றங்கரையோரம் உள்ள செங்கல்சூளைகள் மின்மோட்டார் வைத்து அத்துமீறி உறிஞ்சுவதால் உறை கிணறுகளுக்கு தண்ணீர் வருவதும் தடைபடுகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.

Related Stories: