காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டும்: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிரந்தரமான தலைவர் நியமிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: 17வது மக்களவை தேர்தல் நிறைவு பெற்று மோடி நாளை (இன்று) பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அதற்கு வாழ்த்துக்கள். மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிரந்தரமான தலைவர் நியமிக்க வேண்டும்.

மாநில அரசு அதனை வற்புறுத்த வேண்டும். நேற்று (நேற்றுமுன்தினம்) நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டனர். கடந்த டிசம்பரிலிருந்து மே மாதம் வரை கொடுக்காமல் விட்டுப்போன தண்ணீரைப்பற்றி வாரியம் எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு அதைப்பற்றி கேட்கவில்லை.

கர்நாடக மாநிலத்தின் பாஜகவின் தலைவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தமிழகத்திற்கு தண்ணீரை கொடுக்கக்கூடாது என்று பகிரங்கமாக தெரிவித்ததுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி கர்நாடக மக்களுக்கு துரோகம் செய்து விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி தண்ணீரை கொடுக்கவிடாமல் இருக்க கர்நாடகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: