வில்லங்கசான்று தவறுதலாக வந்தால் செலுத்திய பணம் வாபஸ் இல்லை

சென்னை: வில்லங்க சான்று தவறுதலாக வந்தால் செலுத்திய பணம் திருப்பி அளிக்கப்படாது என்று பதிவுத்துறை வட்டாரங்கள் ெதரிவித்துள்ளன. தமிழகத்தில் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்குவோர் அதன் முந்தைய பரிமாற்ற விவரங்களை பார்ப்பதற்கு வில்லங்க சான்று பெறுவது அவசியம். இந்த நிலையில் கடந்த 2009 முதல் பதிவுத்துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டதால், அதற்கு பிறகு பதிவு செய்த பத்திரங்களின் விவரங்களை ஆன்லைன் மூலம் பார்க்க வேண்டும். ஆனால், அதற்கு முந்தைய விவரங்களை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தான் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2009க்கு பதிவு செய்யப்பட்ட 50 கோடி பத்திர நகல்களை ஸ்கேன் செய்ய பதிவுத்துறை முடிவு செய்தது. இதை தொடர்ந்து தனியார் மென்பொருள் நிறுவனம் மூலம் 46 கோடி பத்திரங்களுக்கு மேல் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் வில்லங்கசான்று விண்ணப்பித்து பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு வில்லங்க சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது பெரும்பாலான கிராமங்கள் பெயர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் கேட்ட விவரங்கள் தருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மாறி, மாறி பொதுமக்கள் வில்லங்க சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தவறாக வில்லங்க சான்று வருவது தொடர்பாக புகார் தெரிவித்தால் கூட செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படுவதில்லை. இது குறித்து கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்டால் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தற்போது 2.0வில் ஒரு வில்லங்க சான்று மனு செய்யும் போது, அதற்கான சான்றுகள் தேடுதலில் ஏதேனும் விடுபட்டாலோ அல்லது கூடுதல் விவரங்களை தவறுதலாக தந்து விட்டாலோ அந்த சான்றினை மீண்டும் திருத்த முடியாது. இதனால், மீண்டும் புதிய வில்லங்க மனுவைினை தான் தாக்கல் செய்து கட்டணமும் செலுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் 30 ஆண்டுக்கான வில்லங்கத்திற்கு ரூ.450 கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வில்லங்க சான்று தவறுதலாக வந்தால் கூடுதலாக ரூ.450 கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு தவறாக சான்றுகள் வருவதற்கு டிசிஎஸ் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் தான் காரணம். அவர்களுக்கு போதிய அனுபவ அறிவும், சான்றுகளை தேடுதல் மேற்கொள்ள போதிய பயிற்சி அளிக்கப்படாத காரணத்தினால் இது போன்று இரண்டு முறை கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. எனவே, வில்லங்க சான்றுகள் தேடுதலை சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களை கொண்டே மேற்கொள்ள வேண்டும். வில்லங்க சான்றில் உள்ள தவறுகளை திருத்த வேண்டுமென்றால் தற்போது மாவட்ட பதிவாளர் மூலமே செய்ய வேண்டியுள்ளது. இதனால், மாவட்ட பதிவாளரை பார்க்க அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: