பாதுகாப்பு அறையில் பத்திரமாக உள்ளது சபரிமலையில் தங்கம், வெள்ளி பொருட்கள் மாயமாகவில்லை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பேட்டி

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி பொருட்கள் மாயமாகவில்லை. பாதுகாப்பு அறையில் பத்திரமாக உள்ளது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம், வெள்ளி உள்பட விலை உயர்ந்த பொருட்கள், ஆறன்முளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பாதுகாப்பு அறையில் இருந்து மாயமானதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து தேவசம்போர்டு கணக்கு தணிக்கை துறை அதிகாரிகள் ஆறன்முளாவில் உள்ள தேவசம்போர்டு அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். இதில் மாயமானதாக கூறப்பட்ட 40 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் சபரிமலையில் இருந்து வந்துள்ளதாக அங்குள்ள பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலவெள்ளி பொருட்கள் பல்வேறு கோயில்களில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கணக்குகள் சரியாக இருப்பதாக கூறி அதிகாரிகள் பாதுகாப்பு அறையை திறந்து பரிசோதிக்க வில்லை.

இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது:

சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய தங்கம், வெள்ளி பொருட்கள் மாயமானதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை.

ஆறன்முளாவில் உள்ள பாதுகாப்பு அறையில் தங்கம், வெள்ளி உட்பட 10,413 பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அறைக்கு பொறுப்பு வகித்த சில அதிகாரிகள் புதிதாக வந்த அதிகாரிகளுக்கு பொறுப்புகளை முறையாக ஒப்படைக்கவில்லை. இதனால் சிலரது ஓய்வு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது தங்கம் வெள்ளி மாயமானதாக தவறான தகவல் பரவ மோகன் என்ற அதிகாரி தான் காரணம். இவர் ஓய்வு பெறும்போது புதிதாக வந்த அதிகாரியிடம் கணக்குகளை ஒப்படைக்க வில்லை. இவர் செய்த தவறு தான் அனைத்துக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்த பொருளும் மாயமாகவில்லை என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனால் பாதுகாப்பு அறையை திறந்து பரிசோதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றார்.

Related Stories: