ஈரோடு அருகே இரவு பகலாக தொடரும் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பூலேரிக்காடு பகுதியில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதாகவும், ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர் பூலேரிக்காடு பகுதியில் தனியார் நிலங்களில் அரசு அனுமதியின்றி டிராக்டர் மற்றும் லாரிகளில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர், அகல பாதாளத்திற்கு செல்வதாகவும், மணல் கொள்ளையை தடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சி தலைவருக்கு அப்பகுதி இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து விசாரிக்க வேண்டிய அந்தியூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர், மணல் திருடும் நபர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு மணல் கொள்ளையை தடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் தினமும் 100 முதல் 150 டிராக்டர் மற்றும் லாரிகளில் மணல் திருட்டு எந்தவித அச்சமும் இல்லாமல் இரவு பகலாக நடந்து வருவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிலத்தின் மேற்பகுதியில் உள்ள வண்டல் மண்ணை செங்கல் சூளைகளுக்கும், அதன் அடியில் உள்ள குருமணலை கட்டிட கட்டுமானங்களுக்கும் தோண்டி செல்வதாக கூறப்படுகின்றது. சிலரது நிலத்தில் 40 அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்படும் வண்டல் மணலை அங்கேயே சல்லடை வைத்து சலித்து வீடு கட்டுமானத்திற்கு ஏற்ற வகையில் டிராக்டரில் ஏற்றி சென்று சப்ளை செய்வதாகவும், இந்த கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது. ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பவருக்கு  மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததால், தமிழக டிஜிபி க்கு அனுப்புவதற்கு பதில் சென்னை காவலானையர் அலுவலகத்திற்கு புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளித்து வைத்துள்ளனர் அப்பகுதி இளைஞர்கள்.

 இந்த புகார் மனு காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சொந்த பயன்பாட்டிற்கு என்று தங்களிடம் அனுமதி பெற்ற நிலத்தின் உரிமையாளர்கள் அதனை வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுவதையடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் வற்றி கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்ற விபரீதம் உணர்ந்து தான் ஆறுகளில் மணல் அல்ல உயர்நிதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை மீறி உள்ளூர் தோட்டங்களிலும், தனியார் நிலங்களிலும், தங்கு தடையின்றி மணல் கொள்ளையை துவக்கியுள்ளனர் மணல் திருடர்கள். இதனை தடுக்க ஆவணம் செய்யவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 

Related Stories: