சர்ச்சை பேச்சு விவகாரம் கமலுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள்: டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான் என பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என மனுதாரருக்கு பாட்டியாலா நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளப்பட்டி பகுதியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால் இப்படி பேசவில்லை. காந்தியின் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதை சொல்கிறேன். நாட்டில் சமரசம் தலைத்தோங்கி இருக்க வேண்டும் என பேசினார். இது தேசிய அளவில் மிகப்பெரும் சர்ச்சையாக தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்து சேனா அமைப்பின் தரப்பில் விஷ்ணு குப்தா டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று கடந்த 14ம் தேதி தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், மே 16ம் தேதி விசாரணை மேற்கொள்வதாக உத்தரவிட்டிருந்தது. மேலும் இதே கோரிக்கையை முன்வைத்து புதுடெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் நீதிபதி சுமித் ஆனந்த் அமர்வில் நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கில் உங்களுக்கான தொடர்பு என்ன என்று மனுதாரரான விஷ்ணு குப்தாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “நான் ஒரு இந்து என்பதால் அதற்கான அனைத்து முகாந்திரமும் உள்ளது. அதனால் மேற்கண்ட கட்சியின் தலைவரான கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்ப வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி உத்தரவில், “இந்த வழக்கை பொறுத்தமட்டில் போதுமான முழு ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே அதனை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் தாக்கல் செய்யுங்கள். அன்றைய தினம் புகார்தாரின் வாக்குமூலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும். அதன் பின்னர் சம்மன் அனுப்புவது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கும் எனக்கூறி வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: