தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் : போபாலில் சாமியார் கம்ப்யூட்டர் பாபா மீது வழக்குப்பதிவு

போபால் : போபால் தொகுதியில் போட்டியிடும் திக்விஜய் சிங்கிற்காக சாமியார் கம்ப்யூட்டர் பாபா சிறப்பு பூஜை நடத்தியது குறித்து அவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 14வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 19ம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் களத்தில் உள்ளார். அவருக்கு எதிராக பாஜக சார்பில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் போட்டியிடுகிறார். இவர் 2008ம் ஆண்டில் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

இதனையடுத்து போபால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக போபாலில் கம்ப்யூட்டர் பாபா ஹயோயாக் யாகம் நடத்தினார். சுமார் 1000க்கும் மேற்பட்ட சாதுக்களை வரவழைத்து அவர் பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்கு முன்னதாக சிறப்பு பூஜை ஒன்றை அவர் நடத்தினார். அதில் திக்விஜய் சிங்கும் கலந்து கொண்டார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. கம்ப்யூட்டர் பாபா பூஜை நடத்தியது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சாமியார் கம்ப்யூட்டர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: