அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர்: ஐபோன் விலை உயர வாய்ப்பு என தகவல்

வாஷிங்டன்: அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போரால் ஆப்பிள் ஐபோன் உற்பத்திக்கான செலவுகள் 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும், ஐஃபோன் உதிரிபாகங்கள் பலவற்றை சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் அதிகரித்துள்ளது. சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. இரண்டு நாடுகள் இப்படி வரிகளை உயர்த்தி வரும் நிலையில், இரு நாடுகளிலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தை செய்து வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு செலவுகள் அதிகரித்துள்ளது.ஏற்கனவே ப்ரீமியம் மொபைல் ஃபோன் சந்தையை ஆப்பிள் இழந்து வரும் நிலையில் வரி பிரச்னையும் எழுந்துள்ளது. இதனால் ஐஃபோன் உற்பத்தி செலவு அதிகரித்து லாபம் அல்லது விற்பனை சரியும் என்ற அச்சத்தில் ஆப்பிள் உள்ளது.

Related Stories: