பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி பொருத்த கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்

சென்னை: பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை

கோவையில் பள்ளி வாகனத்தில் சென்ற 4 வயது சிறுமியை வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பத்திரிகையிலும் செய்தி வெளியானது . அதே போல வட மாநிலங்களில் பள்ளி வாகனங்களில் செல்லும் சிறுமிகளுக்கு ,வாகனங்களை இயக்கம் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக பல்வேறு தரப்பினர் சார்பாக குற்றச் சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. எனவே இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுப்பதற்கும் பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வந்தது.

உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும் பள்ளி வாகனங்களை அந்தந்த பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அடுத்த மாதம் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் துவங்க உள்ள நிலையில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் இந்த தமிழக அரசின் விளக்கத்தை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு தொடர்பாக ஜூன் மாதத்திற்குள் பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: