சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: ஒருவர் கைது; விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை, மே. 13: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர் கடத்த முயன்ற ஆசாமி பிடிபட்டார். அவரிடம் இருந்து 9.6 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் ஸ்கேன் மூலம் சோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சர்பூதின் அலி (58) என்பவர் கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்ல வந்திருந்தார். அவரது சூட்கேஸை ஸ்கேன்செய்தபோது அதில் பணம் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த சூட்கேஸை தனியாக எடுத்து திறந்து பார்த்தனர்.

ஆனால் அதில் ஆடைகள் மட்டுமே இருந்தன. மேலும் சந்தேகமடைந்த அதிகாரிகள், சூட்கேஸில் உடமைகளை எடுத்துவிட்டு நுணுக்கமாக ஆய்வு செய்ததில் சூட்கேஸின் இரண்டு பக்கவாட்டிலும் ரகசிய அறை இருப்பதை கண்டுபிடித்தனர். அதை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் இந்திய மதிப்பு ரூ.9.6 லட்சம். சுங்க அதிகாரிகள் சர்பூதின் அலியிடம் நடத்திய விசாரணையில் அது கணக்கில் வராத பணம் என்பதும் சிங்கப்பூரில் யாரோ ஒருவருக்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. மேலும் சுங்க அதிகாரிகள் அது கடத்தல் பணமா அல்லது ஹவாலா பணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: