திமுக முன்னாள் எம்.பி. கோவை ராமநாதன் மரணம் : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கோவை: கோவை திமுக முன்னாள் எம்.பி. மு.ராமநாதன் மரணம் அடைந்தார். அவரது  உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக முன்னாள் எம்.பி கோவை மு.ராமநாதன்  (87).  இவர்,  கோவையில் உன்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில்  மரணம் அடைந்தார்.  இவருக்கு, ராமகாந்தம் என்ற மனைவியும்,  பன்னீர்செல்வம், இளங்கோவன்,  மு.ரா.செல்வராஜ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.  மறைந்த மு.ராமநாதன், சிறந்த மேடை பேச்சாளராக திகழ்ந்தார். தற்போது, திமுக  உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக  இருந்து வந்தார். 1971-1976  காலக்கட்டத்தில் திமுக மேலவை உறுப்பினராக இருந்தார்.  1984, 1989 ஆகிய இருமுறை  எம்எல்ஏவாக இருந்தார். 1996-2001 காலக்கட்டத்தில்  கோவை தொகுதி எம்.பி.யாக  இருந்தார்.

இவரது உடலுக்கு திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் நேரில்  அஞ்சலி செலுத்தினார். இதன்பின், மு.க.ஸ்டாலின் கூறுகையில், `கொங்கு மண்டலத்தில், திமுகவின்  ‘கோவை தென்றல்’  என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டவர்  மு.ராமநாதன். திமுக மற்றும் திராவிட இயக்கத்தின்  மிகப்பெரிய பல்கலைக்கழகமாக  விளங்கியவர். அவருடைய  மறைவு, இந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல,   ஒட்டுமொத்த  திராவிட  இயக்கத்திற்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும்  குடும்பத்தினர் மற்றும்  கழக தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  ஆறுதலையும்  தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறினார். அரைக்கம்பத்தில் திமுக கொடி: கோவை மு.ராமநாதன் மறைவினையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: