முன்கூட்டியே ஓய்வு பெறவும் பரிந்துரை செயல்படாத 1200 ஐபிஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: சிறப்பாக செயல்படாத 1,200 ஐபிஎஸ் அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 4,940 ஐபிஎஸ்அதிகாரிகள் பணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த காலக்கட்டத்தில் 3,972 ஐபிஎஸ் அதிகாரிகளே பணியில் இருந்தனர். இந்நிலையில், மோடி அரசு  ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி பதிவேடுகளை ஆய்வு செய்யும் கொள்கையை கொண்டு வந்தது. இதன்மூலம், அந்த அதிகாரிகளின்  செயல்பாடுகளை மதிப்பிடவும், சிறப்பாக செயல்படாதவர்களை அடையாளம் காணவும் முடியும்.  அனைத்து இந்திய பணிகள் (இறப்பு மற்றும் ஓய்வு பலன்கள்) விதி 1958ம் ஆண்டின்படி சிறப்பாக செயல்படாத சம்மந்தப்பட்ட  அதிகாரியை பொதுவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெற அனுமதிக்கலாம்.

இதற்காக 3  மாதத்திற்கு முன்னதாக அந்த அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்  அனுப்ப வேண்டும். இதன் ஒரு பகுதியாக கடந்த 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலத்தில் அதிகாரிகளின் பணிபதிவேடு  ஆய்வு செய்யப்பட்டது. இதில் சிறப்பாக செயல்படாத 1181 ஐபிஎஸ் அதிகாரிகளை அரசு கண்காணித்து வருகிறது.  இந்த  காலகட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், சிறப்பாக செயல்படாத 10 ஐபிஎஸ் அதிகாரிகளை ஓய்வு காலத்திற்கு முன்பே ஓய்வுபெற பரிந்துரை செய்துள்ளோம்.  

 இதேபோல், கடந்த 2015ம் ஆண்டு முதல் கடந்த 2018ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டு காலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிப்பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் குறைபாடு உள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகளை முன்னதாகவே  பணிஓய்வு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: