இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகளோடு தொடர்புடையர்களை இன்னும் 3 நாட்களில் கைது செய்வோம் : இலங்கை அதிபர் சூளுரை

கொழும்பு : இலங்கை வெடிகுண்டு தாக்குதல் விவகாரத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்திருக்கும் அனைவரும் இன்னும் 3 நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் திருநாள் அன்று நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற அமர்வு கூட்டப்பட்டது. அதில் பேசிய அதிபர் சிறிசேன, தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றிய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 13 வீடுகள், 41 வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

அவற்றை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்னும் 3 நாட்களில் ஐஎஸ் தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்திருக்கும் அனைவரையும் கைது செய்யப் போவதாக சிறிசேன தெரிவித்தார். தமிழ் ஈழ விடுதலை புலிகள் உருவாகிய காலத்தில் தமிழ் மக்களை சிங்கள சமுதாயம் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்த்ததால் தமிழர்கள் பலர் விடுதலைப் புலிகளாகினர் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். தற்போது முஸ்லீம் மக்களை பிழையான கண்ணோட்டத்தோடு சிங்கள மக்கள் பார்ப்பது தவறானது என்றும் அவ்வாறான மனோபாங்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் சிங்கள மக்களை அதிபர் சிறிசேன கேட்டுக் கொண்டார்.   

Related Stories: