உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்: மூடப்பட்ட தனி அறையில் ரஞ்சன் கோகாயிடம் விசாரணை

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து அவரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு முன்மூடப்பட்ட அறையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்சநீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ரஞ்சன் கோகாய், சில முக்கிய வழக்குகளை வரும் வாரங்களில் கையாள உள்ளதால் கூட இது போல குற்றச்சாட்டுகள் எழலாம் என கூறினார். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாகவும், தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பவர் நீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதிகள் பாப்டே, இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணை தனி அறையில் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.

புகாரளித்த பெண் ஊழியரிடம், 3 நீதிபதிகள் தவிர வேறு யாரும் விசாரணையின் போது அனுமதிக்கப்படுவது இல்லை. கடந்த மாதம் 26, 29ம் தேதிகளில் நடந்த விசாரணையில் பங்கேற்ற பெண் ஊழியர், நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர், அவர் இந்த விசாரணையில் இருந்து விலகுவதாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனிடையே, நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக தெரிவித்தார். மேலும் விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த புகார் குறித்து இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரணைக்கு ஆஜரானார். நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு முன் மூடப்பட்ட தனி அறையில் அவர் விசாரிக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான தகவலைகள் ஏதும் வெளியாகவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: