வெள்ளை உடைகள் வாங்கிய மர்ம பெண்கள் இலங்கை புத்த கோயில்களில் தாக்குதல் நடத்த திட்டம்? : உளவுத்துறை தீவிர விசாரணை

கொழும்பு : இலங்கையில் புத்த கோயில்களில் பெண் தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இலங்கை  தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர  ஓட்டல்களில் நடந்த மனித குண்டு தாக்குதலில் 253 பேர் பலியாயினர். இதில் ஒரு பெண் உட்பட 9 பேர் மனித குண்டாக செயல்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. 500க்கும்  மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இலங்கையைச்  சேர்ந்த, ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பினரை ஐஎஸ் அமைப்பு  பயன்படுத்தியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிம் தாக்குதலில் பலியானான்.  இதையடுத்து இலங்கையில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

கல்முனை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை ராணுவத்தினர் கடந்த 26ம் தேதி சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.அந்த வீட்டில் ஏராளமான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், புத்தமத பெண் துறவிகள் அணியும் வெள்ளை நிற பாவாடை மற்றும் ஜாக்கெட்டுகள் 5 செட் அங்கிருந்து மீட்கப்பட்டன. இதனால் புத்தமத கோயில்களில் பெண் தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இலங்கையில் உள்ள ஜவுளிக் கடைகளில் மர்ம நபர்கள் யாரும், வெள்ளை உடைகள் வாங்கினரா என்ற விசாரணையில் உளவுத்துறையினர் இறங்கினர். அப்போது இலங்கையின் கிரிவுலா பகுதியில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் கடந்த மார்ச் 29ம் தேதி அன்று பெண்கள் சிலர், 9 செட் வெள்ளை நிற உடை வாங்கியது சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.  இவற்றில் 5 செட் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீதம் 4 செட் எங்குள்ளது என்ற விசாரணையில் உளவுப்பிரிவு ஈடுபட்டுள்ளது.

வீட்டில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொழும்பைச் சேர்ந்த வணிகர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். அவர் தப்பியோடிவிட்டார். அவர் யாழ்பாணத்தில் கட்டியுள்ள வீட்டில், 25 மீட்டர் உயரம், 15 அடி அகலத்தில் பதுங்கு குழி, மின்சார வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது எதற்காக கட்டப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜினாமா செய்ய மறுத்த

போலீஸ் ஐ.ஜி சஸ்பெண்ட்

உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும், குண்டு வெடிப்பை தடுக்க இலங்கை தவறிவிட்டது. இதற்கு பொறுப்பேற்று பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, காவல்துறைக்கு தலைமை தாங்கும் ஐ.ஜி பூஜித் ஜெயசுந்தரா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் சிறிசேனா கூறினார். பெர்னாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் ஐஜி பூஜித் ஜெயசுந்தரா மறுத்துவிட்டார். ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா செய்தால், நானும் ராஜினாமா செய்வேன்’’ என கூறிவிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிபர் சிறிசேனாவின் பொறுப்பில் உள்ளது.  மேலும் காவல்துறை தலைவரை நாடாளுமன்ற நடவடிக்கை மூலமாக மட்டுமே பதவி நீக்க முடியும். இதனால் இதன் முதல் நடவடிக்கையாக ஐஜி பூஜித் ஜெயசுந்தரா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேனா அலுவலகம் நேற்று அறிவித்தது. காவல்துறை பொறுப்பு தலைவராக டிஐஜி விக்ரமாராத்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.

முகத்தை மூடும் ஆடைகள் அணிய திடீர் தடை

இலங்கையில் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்கும்படி உடைகள் அணியக் கூடாது என இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். அவரது அலுவலகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘‘முகத்தை மறைக்கும் வகையில் யாரும் உடை அணியக் கூடாது. இது அடையாளம் காண்பதை சிரமமாக்கும். நாட்டின் பாதுகாப்பை இந்த தடை உறுதி செய்யும்’’ என கூறப்பட்டுள்ளது.

கொச்சிக்கும் குறி?

கேரளாவின் கொச்சியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கொச்சியில் ஏராளமானோர் தங்கள் வீட்டில் உள்ள அறைகளை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு கொடுக்கும் ஹோம் ஸ்டேக்களை நடத்தி வருகின்றனர். இந்த ஹோம் ஸ்டேக்களில் வெளிநாட்டினர் உட்பட சுற்றுலா பயணிகள் வந்து தங்குவது வழக்கம். இதை நடத்த அரசு அங்கீகாரம் தேவை என்றாலும் அனுமதி இல்லாமலும் ஹோம் ஸ்டேக்கள் செயல்படுகின்றன. இந்த ஹோம் ஸ்டேக்களில் தீவிரவாதிகள் தங்க வாய்ப்புள்ளதாக போலீசார் கருதுவதால் இங்கு தங்குபவர்கள் குறித்த விவரங்களை தினமும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் கொச்சியில் அனைத்து ஓட்டல்களிலும் தங்கியுள்ளவர்கள் குறித்த விவரத்தை உடனுக்குடன் தெரிவிக்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் பாலக்காடு மற்றும் காசர்கோட்டில் 3 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி ஒருவரை கைது செய்து விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: