செய்யாறு அருகே 30 ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க மக்கள் கோரிக்கை

செய்யாறு: செய்யாறு அருகே 30 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  செய்யாறு சட்டப்பேரவை தொகுதி வெம்பாக்கம் தாலுகாவில் உள்ளது சித்தாலப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் 212 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றிலும் கல் குவாரிகள் உள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாகரல் சாலை, சுருட்டல் கிராம சாலை, சின்ன ஏழாச்சேரி என அனைத்து சாலைகளிலும் குவாரிகளளுக்கு தினமும் ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது.  போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதிக்கு பஸ் வசதியும் இல்லை. இதனால் இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் வெளியூர்களுக்கோ நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியவில்லை. மாணவ, மாணவிகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. வெளியூர் மக்களும் இந்த ஊர்களுக்கு வந்து செல்ல அச்சமடைகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் திருமணம் செய்ய வெளியூர்களை சேர்ந்தவர்கள் பெண் தர மறுக்கின்றனர். அதேபோல் இங்குள்ள இளம்பெண்களை திருமணம் செய்யவும் தயக்கம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி அவசரத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வந்து செல்லவும் வழியில்லை. இதனால், நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.  சுமார் 30 ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைக்கக்கோரி மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சித்தலப்பாக்கம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் இந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று  அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: