லாகூர்: ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆவணங்களை பாகிஸ்தான் முதல் முறையாக, காட்சிக்கு வைத்துள்ளது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், ஜாலியன் வாலாபாக் படுகொலை யாராலும் மறக்க முடியாது. 1919ம் ஆண்டு ரவுலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இதன்படி, யாரையும் விசாரணையின்றி கைது செய்யலாம். இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஜெனரல் டயர் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதன் நினைவாக, லாகூர் அருங்காட்சியகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆவணங்களை முதல் முறையாக பாகிஸ்தான் அரசு காட்சிக்கு வைத்துள்ளது. பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு வரலாற்று கண்காட்சி நடக்கிறது. இதில், ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்பான 70 ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்களித்த தலைவர்கள் பற்றிய அனைத்தும் இதில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. ‘அந்த காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். வரும் 26ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும்’ என பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி