கலப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியை பயன்படுத்தலாம்: மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மும்பை: ‘கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம்’ என்ற பரபரப்பான தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவு வழங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த அஞ்சால் பட்வாய்க் (19) என்ற எம்பிபிஎஸ் மாணவி, தனது தந்தையின் ஜாதிக்கு பதிலாக தாயாரின் ஜாதி பெயரை பயன்படுத்த அனுமதிக் கோரி மாவட்ட ஜாதி சரிபார்ப்பு கமிட்டியிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், தந்தையின் ஜாதியை வைத்தே மாணவியின் ஜாதியை முடிவு செய்ய முடியும் என்று கமிட்டி கூறியது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அஞ்சால் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுனில் சுக்ரே, புஷ்பா கனேடிவாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்து நீதிபதிகள் நேற்று அளித்த , வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், “இந்தியாவில் ஆணாதிக்க சமூக அமைப்பு முறை உள்ளது. இப்போது நிலைமை மாறி வருகிறது. நமது அரசமைப்பு சட்டம் கூட சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில்தான் உள்ளது.

ஆண் மற்றும் பெண்ணை நாம் சமமாகவே பாவிக்கிறோம். எனவே, கலப்புத் திருமண தம்பதிக்கு பிறந்த குழந்தைகள், தனது தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம்’’ என்று தெரிவித்தனர். மாணவி அஞ்சாலும், அவருடைய தாயார் பாரதியும் நாக்பூரில் உள்ள காஞ்சிபேத் பகுதியில் வசித்து வருகிறார்கள். பாரதி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தார். ஆனால், அஞ்சால் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது தந்தை அந்த குடும்பத்தை அனாதையாக விட்டுச் சென்றார். இந்த நாள் வரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பாரதி பல்வேறு வேலைகளை செய்து கஷ்டப்பட்டு தனது மகளை வளர்த்து ஆளாக்கினார். அஞ்சாலுக்கு மெரிட் அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: